செய்திகள்
ரோகித் சர்மா

மும்பை அணி வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள்- கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

Published On 2020-10-07 05:53 GMT   |   Update On 2020-10-07 05:53 GMT
மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.
அபுதாபி:

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4-வது வெற்றியை பெற்றது.

அபுதாபியில் நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.

சூர்யகுமார் யாதவ் 47 பந்தில் 79 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 23 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஸ்ரேயாஷ் கோபால் 2 விக்கெட்டும், ஆர்ச்சர், கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பட்லர் அதிகபட்சமாக 44 பந்தில் 70 ரன் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பும்ரா 20 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். போல்ட்,பேட்டின்சன் தலா 2 விக்கெட்டும், போல்லார்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. மொத்தத்தில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

மும்பை அணி வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களிடம் நிறைய தரம் இருக்கிறது. அதை சிறப்பாக செய்கிறோம். அனைவரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். அவர்கள் அந்த நாளில் தங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறார்கள்.

ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு சிறப்பாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இருக்கிறார்கள்.

சூர்யகுமார் யாதவ் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஷாட்டுகள் நேர்த்தியாக இருந்தது. கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால் அவர் புதுமையை புகுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி 7-வது இடத்துக்கு பின் தங்கியது.

தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது, தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால், ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. கடந்த 3 போட்டிகளில் எங்களால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை என்றார்.

மும்பை அணி 7-வது ஆட்டத்தில் டெல்லியுடன் வருகிற 11-ந் தேதி அபுதாபியில் மோதுகிறது. ராஜஸ்தான் அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 9-ந் தேதி சந்திக்கிறது.
Tags:    

Similar News