செய்திகள்
ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச், பிளிஸ்கோவா முதல் சுற்றில் வெற்றி

Published On 2020-09-29 19:59 GMT   |   Update On 2020-09-29 19:59 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பிளிஸ்கோவா முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
பாரீஸ்:

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரர் பெரேட்டினி (இத்தாலி) 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வாசெக் போஸ்பிசிலை (கனடா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் மிகைல் மிர்ரை (சுவீடன்) வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார். முன்னதாக 12 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜெராசிமோவை (பெலாரஸ்) வெளியேற்றி வெற்றியோடு தொடங்கினார். பிரெஞ்ச் ஓபனில் தனது 94-வது வெற்றியை பதிவு செய்த நடால் அடுத்து அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டுவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதல் தடையை கடப்பதற்கு 2 மணி 15 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அவர், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய மயார் ஷெரிப்பை (எகிப்து) 6-7 (9-11), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 62 நிமிடங்களில் மேடிசன் பிரிங்கிலை (அமெரிக்கா) துவம்சம் செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெனிபர் பிராட்டி 4-6, 6-3, 7-9 என்ற செட் கணக்கில் 17 வயதான கிளாரா டாசனிடம் (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 45 நிமிடங்கள் நீடித்தது. சோபியா கெனின் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
Tags:    

Similar News