செய்திகள்
டோனி

ராஜஸ்தானுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றி பெறுமா?

Published On 2020-09-21 09:06 GMT   |   Update On 2020-09-21 09:06 GMT
சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை (22-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சார்ஜாவில் நடக்கிறது.

சார்ஜா:

ஐ.பி.எல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் அந்த அணிக்கு எதிரான தொடர் தோல்விக்கு சி.எஸ். கே. முற்றுப்புள்ளி வைத்தது.

சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை (22-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சார்ஜாவில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுபோல் ராஜஸ்தானுக்கு எதிராகவும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டிக்கான சி.எஸ்.கே. அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து குணம் அடையாத பிராவோ நாளைய போட்டியிலும் ஆட மாட்டார்.

சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. அம்பதி ராயுடு, டுபெலிசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

இதேபோல பந்துவீச்சில் ஜடேஜா, நிகிடி, தீபக் சாஹர் ஆகியோர் முத்திரை பதித்தனர். ஆல்ரவுண்டர் பணியில் சாம்கரண் சிறப்பாக செயல்பட்டார்.

ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பட்லர் நாளைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், மில்லர், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரு டை, சஞ்சுசாம்சன், டாம்கரண், ஜோப்ர ஆர்சர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் இது வரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14-ல், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

Tags:    

Similar News