செய்திகள்
கவாஸ்கர்

கொல்கத்தா அணிக்கு மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும்- கவாஸ்கர் வலியுறுத்தல்

Published On 2020-09-21 08:24 GMT   |   Update On 2020-09-21 08:24 GMT
கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

துபாய்:

ஐ.பி.எல். போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார்.

தினேஷ்கார்த்திக் 2018-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். காம்பீருக்கு பதிலாக அவர் அந்த பொறுப்பை ஏற்றார். 2018-ல் அவரது தலைமையிலான கொல்கத்தா அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆனால் கடந்த முறை கொல்கத்தா அணி 5-வது இடத்தை பிடித்தது. தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கும், சிறப்பாக அமையவில்லை. அவர் 14 ஆட்டத்தில் 253 ரன் எடுத்தார்.

35 வயதான தினேஷ் கார்த்திக் இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வேட்கையில் உள்ளார்.

இந்தநிலையில் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசை துடிப்பாகவும், எல்லோரையும் கவரும் வகையில் உள்ளது. மார்கன் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலமாக இருப்பார். அவர் நிலையாக ஆடக்கூடியவர். அனுபவம் வாய்ந்தவர். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.

கொல்கத்தா அணி இந்த சீசனில் முதல் 4 அல்லது 5 ஆட்டத்தில் சிறப்பாக செயல் படாவிட்டால் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஏனெனில் எப்போதும் இதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News