செய்திகள்
டோனி- சுரேஷ் ரெய்னா

ஐ.பி.எல். போட்டியில் 3-வது வீரராக டோனி விளையாட வேண்டும்- சுரேஷ் ரெய்னா விருப்பம்

Published On 2020-09-06 06:59 GMT   |   Update On 2020-09-06 06:59 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3-வது வீரராக டோனி விளையாட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான ஐ.பி.எல். அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் துபாயில் இருந்து நாடு திரும்பினார்.

அவருக்கும் கேப்டன் டோனிக்கும் மோதல் இருந்ததாகவும், மேலும் சி.எஸ்.கே. நிர்வாகத்துடன் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் விலகியதாக தகவல் வெளியானது.

இதை ரெய்னா மறுத்திருந்தார். தனது சொந்த காரணத்துக்காகவே போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

ரெய்னா ஆடாததால் சி.எஸ்.கே.அணியில் அவரது இடமான 3-வது வரிசையில் யார் களம் இறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டன் டோனி இந்த வரிசைக்கு பொறுத்தமானவர் என்று முன்னாள் வீரர் காம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என்று ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

3-வது வரிசையில் அசாத்திய திறமை படைத்த பேட்ஸ்மேன்களால் மட்டுமே விளையாட முடியும். அந்த வரிசை அணிக்கு அஸ்திவாரம் போன்றது. இதனால் டோனி 3-வது பேட்ஸ்மேனாக ஆடவேண்டும்.

சர்வதேச போட்டிகளில் 3-வது வீரராக ஆடிய அனுபவம் டோனிக்கு இருக்கிறது. 2005-ல் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக டோனி அபாரமாக ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா?

இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.

இதற்கிடையே ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருசில ஆட்டங்களில் மட்டுமே அவர் ஆடாமல் இருப்பார். போட்டியின் இடையே அவர் சி.எஸ்.கே. அணியுடன் இணைந்து கொள்வார் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News