செய்திகள்
ஐபிஎல் 2020

ஐபிஎல் போட்டி அட்டவணை சனிக்கிழமை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் மும்பையுடன் மோதுவது யார்?

Published On 2020-09-03 18:26 IST   |   Update On 2020-09-03 18:26:00 IST
ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை சனிக்கிழமை வெளியிடப்படும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதல் ஆட்டத்தில் விளையாடுவது யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
ஐபிஎல் 13 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே அட்டவணை வெளியிடப்படும். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டி நடைபெற இருப்பதால் கொரோன வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீரர்கள் தங்குதடையின்றி சென்று வர ஒப்புதல் வாங்க வேண்டியிருந்தது.

சில தினங்களுக்கு முன்புதான் அதற்கான அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான போட்டியை எப்போது வைத்துக் கொள்வது என்ற நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்நிலையில் நாளைமறுதினம் போட்டி அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி நடப்பு சாம்பியனும், 2-ம் இடம் பிடித்த அணியும் முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும்

ஒருவேளை சென்னை அணிக்கான போட்டிகள் ஒரு வாரம் கழித்து தொடங்கும் நிலையில் தயாரிக்கப்பட்டால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடும் அணி எது? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

முதல் போட்டியிலேயே ரசிகர்களை ஆர்வத்தை சுண்டி இழுக்க ஒளிபரப்பு நிறுவனம் விரும்பும். இதனால் இரண்டு முன்னணி அணிகள் விளையாடவே வாய்ப்புள்ளது.

Similar News