செய்திகள்
பந்தை பிடிக்க ஓடும் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன்

சவுத்தாம்ப்டன் டெஸ்ட்: பாலோ ஆன் ஆனது பாகிஸ்தான் - 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 100/2

Published On 2020-08-25 05:56 IST   |   Update On 2020-08-25 05:56:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் பாலோ ஆன் ஆனது பாகிஸ்தான். 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
சவுத்தாம்ப்டன்:

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டாம் சிப்லி மற்றும் ரோரி பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோரி 6 ரன்களிலும் சிப்லி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய கிராவ்லி மற்றும் பட்லர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

கிராவ்லி இரட்டை சதம் அடித்து 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்ன்ங்சை ஆடத்தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாம் மசூத் 4 ரன்னிலும் அபித் அலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த பாபர் அசாம் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

3 ஆம் நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டர் அசார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் அசார் அலி தனித்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இறுதியாக பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அசார் அலி 141 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இதையடுத்து 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், இங்கிலாந்தை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த பாகிஸ்தான் பாலோ ஆன் ஆனது. இதனால், பாகிஸ்தான் அணி நேற்று தனது 2-வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஷான் மசூத் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் பந்து வீச்சிலும் அபித் அலி 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சிலும் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஜோடி நிதின ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணி 56 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 29 ரன்களுடனும் பாபர் அசாம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 
இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்தை விட 210 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. போட்டியில் இன்னும் 1 நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிபெற இங்கிலாந்து முயற்சிக்கும். பாகிஸ்தான் அணி இப்போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம்
இருக்காது.

Similar News