செய்திகள்
ஜேசன் ஹோல்டர்

பேட்டிங்கில் சதம் அடிக்க வேண்டும்: 6 விக்கெட் வீழ்த்திய ஜேசன் ஹோல்டர் சொல்கிறார்

Published On 2020-07-10 09:27 GMT   |   Update On 2020-07-10 09:27 GMT
சவுத்தாம்ப்டன் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய ஜேசன் ஹோல்டர், சதம் அடிப்பது எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2-வது  நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 204 ரன்னில் சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்னும், பட்லர் 35 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 20 ஓவர் வீசி  42 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். கேப்ரியலுக்கு  4 விக்கெட் கிடைத்தது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்து இருந்தது. பிராத்வைட் 20 ரன்னும், ஹோப் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேம்ப்பெல் 28 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

42 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது ஹோல்டரின் சிறந்த பந்து வீச்சு ஆகும். இதன் மூலம் தனது 41- வது டெஸ்டில் அவர் புதிய சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வங்காளதேசத்துக்கு எதிராக 59 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே சிறந்த நிலையாக இருந்தது. ஹோல்டர் 7-வது முறையாக 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.



போட்டிக்குப் பிறகு 28 வயதான ஹோல்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது பந்து வீச்சு மிகவும் திருப்தி அளித்தது. இதேபோல் பேட்டிங்கிலும் சாதிக்க விரும்புகிறேன். இங்கிலாந்தில் 5 விக்கெட் வீழ்த்தி, சதம் அடிக்க வேண்டும் என்பது இலக்காக இருக்கிறது. ஒன்று முடிந்துவிட்டது. அடுத்து சதம் அடிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News