செய்திகள்
சவுரவ் கங்குலி, சமியுல் ஹசன்

கங்குலி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு காட்டம்

Published On 2020-07-09 11:06 GMT   |   Update On 2020-07-09 11:54 GMT
பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விமர்சனம் செய்துள்ளது.
பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து என்று கங்குலி கூறியது நல்ல வரவேற்பு அல்ல என்று விமர்சித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் மீடியா டைரக்டர் சமியுல் ஹசன் புர்னி இதுகுறித்து கூறுகையில் ‘‘கங்குலியின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. இறுதி முடிவு ஆசிய கிரிக்கெட் கமிட்டியால் மட்டுமே எடுக்க முடியும். போட்டிகள் நடைபெற்றால் தற்போது கொரோனா தொற்றால் பாதித்துள்ள பொருளாதார இழப்பிற்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

கங்குலியின் கருத்து ஆசிய கோப்பைக்கான நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் ஒவ்வொரு வாரமும் கூறும் கருத்துக்கள், அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆசிய கிரிக்கெட் கமிட்டிதான் ஆசிய கோப்பை குறித்து முடிவு செய்யும். ஆசிய கமிட்டியின் தலைவர் நஸ்முல் ஹசன்தான் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும். எங்களுடைய அறிவுக்கு எட்டிய வகையில், ஆசிய கிரிக்கெட் கமிட்டி கூட்டத்திற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆசிய கோப்பை 2020-க்கான வேலைகளை ஆசிய கிரிக்கெட் கமிட்டியின் நிர்வாகம் செய்து வருவதாக கருதுகிறேன். திட்டமிட்டபடி சரியான காலத்தில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், சாதகமான மற்ற வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News