செய்திகள்
சவுரவ் கங்குலி

பாகிஸ்தான் நிர்வாகி விலகல்: கங்குலி ஐ.சி.சி. தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார்?

Published On 2020-06-19 09:53 GMT   |   Update On 2020-06-19 09:53 GMT
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று பாகிஸ்தான் நிர்வாகி தெரிவித்துள்ளதால் கங்குலிக்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த சசாங்க் மனோகர் இருக்கிறார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் முடிகிறது.

ஐ.சி.சி. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரையில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரான கங்குலி ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஐ.சி.சி. உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மானி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


ஐ.சி.சி. தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. உண்மையிலேயே என்னை போட்யிடுமாறு சிலர் கேட்டுக் கொண்டனர். 
ஆனால் இதில் எனக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்து விட்டேன். இந்த பதவிக்கு கங்குலி களம் இறங்கி போகிறாரா என்பது எனக்கு தெரியாது. 
என்னை பொறுத்தவரை 2006-ல் எனது பதவி முடிந்த பின் மீண்டும் ஐ.சி.சி.க்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். தற்போது இம்ரான்கான் கேட்டுக் கொண்
டதால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக பாடுபடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

ஈசான் மானி விலகலைத் தொடர்ந்து ஐ.சி.சி. தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. 

கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் கூறும்போது, ‘‘ஐ.சி.சி. தேர்தல் குறித்து முதலில் முறைப்படி அறிவிக்கட்டும். அதன்பின் எங்கள் முடிவை தெரிவிப்போம்’’ என்றார்.
Tags:    

Similar News