செய்திகள்
VIVO IPL

சீன நிறுவனத்தின் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் இந்திய பொருளாதாரத்திற்கு உதவுகிறது: பிசிசிஐ பொருளாளர்

Published On 2020-06-18 21:27 IST   |   Update On 2020-06-18 21:27:00 IST
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பாக இருக்கும் சீன நிறுவனம் இந்திய பொருளாதாரத்திற்கு உதவிகரமாக இருக்கிறது என பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஸ்பான்சராக விவோ (VIVO) நிறுவனம் உள்ளது. இது சீனாவைச் சேர்ந்தது. வருடத்திற்கு 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு வழங்குகிறது.

தற்போது லடாக் மோதலை தொடர்ந்து சீனப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் இந்திய பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கிறது என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அருண் துமல் கூறுகையில் ‘‘நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது, உங்களது பகுத்தறிவு பின்னோக்சி சென்றுவிடும். சீன நிறுவனம் ஆதாயம் பெறுவது அல்லது சீன நிறுவனத்திடம் இருந்து ஆதாயத்தை பெறுவது ஆகிய இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் சீன நிறுவனத்தின் பொருட்களை விற்க அனுமதி கொடுக்கும்போது, அவர்கள் இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுகிறார்கள். அவற்றில் இருந்து சில பகுதிகளை பிசிசிஐ-க்கு செலுத்துகிறார்கள். நாங்கள் அதில் இருந்து இந்திய அரசுக்கு 42 சதவீதம் வரியாக செலுத்துகிறோம். இது இந்தியாவிற்கு ஆதாயம் தருகிறது. சீனாவுக்கு ஆதரவு என்று சொல்ல முடியாது.

அவர்கள் ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து விலகினால், அவர்களுடைய பணத்தை சீனாவுக்கு எடுத்துச் செல்வார்கள். அந்த பணம் இந்தியாவிலேயே இருந்தால், நாம் அதற்காக மகிழ்ச்சி அடைந்தே ஆக வேண்டும். வரி கட்டுவதன் மூலம் நாங்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

நான் கிரிக்கெட் தொடர்பான கட்டுமான வேலைகளை சீன நிறுவனத்திற்கு வழங்கினால், சீன பொருளாதாரத்திற்கு உதவிக் கொண்டிக்கிறேன் என்று அர்த்தம். குஜராத் கிரிக்கெட் சங்கம் மிகப்பெரிய மைதானத்தை கட்டியுள்ளது. அந்த வேலை இந்திய நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பான வேலைகள் சுமார் ஆயிரம் கோடிக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சீன நிறவனத்திற்கு எதையும் வழங்கவில்லை’’ என்றார்.

Similar News