செய்திகள்
ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டம்

Published On 2020-04-21 09:26 GMT   |   Update On 2020-04-21 09:26 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அரசு மார்ச் மாதத்தில் இருந்து ஆறு மாதம் வரை நாட்டின் எல்லையை மூடிவிட்டது. இதனால் அந்த நாட்டில் செப்டம்பர் மாதத்திற்குப் பின்புதான் கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிந்து சகஜ நிலை எப்போது திரும்பும் என்று யாருக்கும் தெரியாது.

இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் கோடிக்கணக்கில் வருவாயை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் போட்டிகளை அடுத்தடுத்து வைத்து வருவாய்களை ஈட்ட திட்டமிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15 வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரும் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் 2020-21 சீசனின் கடைசி நேர போட்டிகளை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இந்தியா டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும் காலத்தில் இந்தத் தொடரை ஐந்து போட்டிகள் கொண்டதாக நடத்தினால் கூடுதலாக வருவாய் ஈட்டலாம் என ஆஸ்திரேலியா நினைக்கிறது. இதனால் தொடரை ஐந்து போட்டிள் கொண்டதாக நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ-யிடம் பேசி முடிவு எடுக்க இருக்கிறது.

இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1991-ல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News