செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்துவது ஆபத்து: முரளீதரன் சொல்கிறார்
ஐபிஎல் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முரளீதரன் ஆபத்தாக முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த மாதம் 29-ந்தேதி முதல் மே மாதம் 24-ந்தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந்தேதிக்கு முதலில் ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்து இருந்தது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தப் போட்டியை நடத்த தயார் என்றும், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விரைவில் கடிதம் எழுதுவோம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை இலங்கையில் நடத்துவது ஆபத்து என்று அந்நாட்டு முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முரளீதரன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐபிஎல் போட்டியை இலங்கையில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது. எனக்கு தெரிந்து இது ஒரு நிரந்தர தீர்வாகாது. முதலில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.
இலங்கையில் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இலங்கைக்கு வருவார்கள். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இது மிகப்பெரிய ஆபத்தை வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும்.
இவ்வாறு முரளீதரன் கூறியுள்ளார்.