செய்திகள்
கோப்பு படம்

2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம்

Published On 2020-03-28 07:36 GMT   |   Update On 2020-03-28 07:36 GMT
2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாசானே:

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்படும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இந்த போட்டி நடைபெறும்.

இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஐ.ஓ.சி. ( சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்வதாக இருந்தனர். இதில் 57 சதவீதம் பேர் ஏற்கனவே போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றிருந்தனர்.

32 சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஐ.ஓ.சி. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய ஆலோசனையில் ஏற்கனவே தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் தகுதி பெறும் முறையை சீராக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 74 வீரர்வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 38 பேர் தனிநபரை சேர்ந்தவர்கள். முப்பத்தாறு பேர் குழுவில் உள்ளவர்கள்.
Tags:    

Similar News