செய்திகள்
இரட்டை சதம் அடித்த ஷுப்மான் கில்

ஷுப்மான் கில் இரட்டை சதம்: நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிரா

Published On 2020-02-02 10:17 GMT   |   Update On 2020-02-02 10:17 GMT
ஷுப்மான் கில் இரட்டை சதமும் பன்சால், ஹனுமா விஹாரி சதமும் அடிக்க நியூசிலாந்து ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் நியூசிலாந்து ஏ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ஏ அணி 216 ரன்னில் சுருண்டது. ஷுப்மான் கில் 83 ரன்களும், ஹனுமா விஹாரி 51 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த சாப்மேன் 114 ரன்களும், விக்கெட் கீப்பர் க்ளீவர் 196 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 7 விக்கெட் இழப்பிற்கு 562 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

346 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் டக்அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஈஸ்வரன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு பிரியங் பன்சால் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. பன்சால் 67 ரன்களுடனும், ஷுப்மான் கில் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பன்சால் அதிரடியாக விளையாடி 164 பந்தில் 115 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்து இரட்டை சதம் நோக்கி சென்றார்.

அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் சதம் அடிக்க, ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்தார். இந்தியா ஏ 3 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஹனுமா விஹாரி 113 பந்தில் 100 ரன்களுடனும், ஷுப்மான் ஹில் 279 பந்தில் 204 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
Tags:    

Similar News