செய்திகள்
முச்சதம் அடித்த சர்பராஸ் கான்

முச்சதம் அடித்து மும்பை அணிக்கு புள்ளிகள் பெற்றுக் கொடுத்த சர்பராஸ் கான்

Published On 2020-01-22 12:50 GMT   |   Update On 2020-01-22 12:50 GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இளம் வீரரான சர்பராஸ் கான் முச்சதம் அடிக்க, உத்தர பிரதேசம் அணிக்கெதிராக மும்பை முன்னிலை பெற்று போட்டியை டிரா செய்தது.
ரஞ்சி டிராபியில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - உத்தர பிரதேசம் அணிகள் மோதின. கடந்த 19-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உத்தர பிரதேசம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் அக்‌ஷ்தீப் நாத் சதமும், விக்கெட் கீப்பர் உபேந்த்ர யாதவ் ஆட்டமிழக்காமல் 203 ரன்கள்  விளாச உத்தர பிரதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 625 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது மும்பை. 128 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு சித்தேஷ் லாட் உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சித்தேஷ் லாட் 98 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்து கேப்டனும் சர்பராஸ் கான் உடன் கேப்டன் ஆதித்யா டரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. டரே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் சர்பராஸ் கான் நிலைத்து நின்று முச்சதம் அடித்தார்.

இவரது முச்சதத்தால் மும்பை அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று 7 விக்கடெ் இழப்பிற்கு 688 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சர்பராஸ் கான் 301 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்றைய கடைசி நாள் ஆட்டம் முடிவதற்கு சில ஓவர்களே இருந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் மும்பை அணிக்கு 3 புள்ளிகளும், உத்தர பிரதேசம் அணிக்கு 1 புள்ளிகளும் வழங்கபட்டன.
Tags:    

Similar News