செய்திகள்
ராஜ்கோட்டில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

2வது ஒருநாள் போட்டி - ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

Published On 2020-01-17 04:42 GMT   |   Update On 2020-01-17 04:42 GMT
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.
ராஜ்கோட்:

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எல்லா துறையிலும் வீழ்த்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்னும், லோகேஷ் ராகுல் 47 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 10 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 16 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (128 ரன்கள்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (110 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்து சரியாமல் நின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களாலும், சுழற்பந்து வீச்சாளர்களாலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரியாக அமையவில்லை. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சும் எதிரணிக்கு அச்சுறுத்தும் வகையில் அமையாமல் போனது பெருத்த ஏமாற்றம் அளித்தது. எனவே இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. 4-வது வீரராக களம் இறங்கியது எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று அதிருப்தி தெரிவித்து இருந்த விராட்கோலி மீண்டும் தனது வழக்கமான 3-வது வரிசையில் களம் இறங்குவார்.

கடந்த ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பந்து இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியதுடன் அந்த பந்தில் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமும் இழந்தார். பந்து தாக்கியதில் தலைக்குள் ஏதோ அதிர்வு இருப்பதாக உணர்ந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனித்தார். ரிஷப் பண்ட் நல்ல நிலையை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்டத்திலும் லோகேஷ் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்டுக்கு பதிலாக கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முந்தைய தோல்வியை மறந்து பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு எதிரான தொடரை வெல்ல ஆஸ்ரேலிய அணி வியூகம் வகுத்து அதிரடியாக செயல்படும். எனவே இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி அல்லது நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.
Tags:    

Similar News