செய்திகள்
எம்எஸ் டோனி

2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... ரன்அவுட் ஆனது குறித்து டோனி உருக்கம்...

Published On 2020-01-13 15:25 GMT   |   Update On 2020-01-13 15:25 GMT
அந்த இரண்டு இன்ச் தூரத்தை கடக்க நான் டைவ் அடித்திருக்க வேண்டும் என எனக்குள்ளே சொல்லிக் கொண்டே இருக்கிறேன் என எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு  உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில்  நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. சேஸிங் செய்யும்போது  டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த டோனி, வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார்.

கடைசி கட்டத்தில் ஜடேஜா அவுட் ஆக டோனியின் தோளில் முழு சுமையும் விழுந்தது. அதற்கு ஏற்றாற்போல 49 ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த டோனி, 3-வது பந்தில் இரண்டு ரன்னுக்காக ஓடியபோது மார்ட்டின் கப்தில் வீசிய துல்லிய த்ரோவில், ரன்அவுட் ஆனார். 240 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த ரன்அவுட் குறித்து டோனி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘தனது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்துக்கு எதிரான  உலக கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன்அவுட் ஆனதாகவும் டோனி தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் தாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இப்போதும் யோசித்து கொண்டே இருப்பதாக டோனி கூறினார்.

மேலும் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

அந்த இரண்டு இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும். இதனை எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் அவுட் ஆனேன். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



சமீபத்தில் பேட்டி அளித்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , 'ஒருநாள் போட்டிகளிலிருந்து டோனி விரைவில் ஓய்வு பெறலாம். டி20 போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் விரும்பலாம். ஐ.பி.எல்., போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20  உலக கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.

ஒருவேளை டோனி, டி20 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு எடுத்தால், நியூசிலாந்து அணிக்கு எதிரான  உலக கோப்பை அரையிறுதி போட்டியே, அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும். ஐ.பி.எல்., போட்டிகளில் தன்னை நிரூபித்து உலக கோப்பை டி20 அணியில் இடம் பெற்று,  அத்துடன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News