செய்திகள்
எம்எஸ் டோனி, சுனில் கவாஸ்கர்

எம்எஸ் டோனி நீண்ட ஓய்வில் இருப்பது ஏன்?: கவாஸ்கர் கேள்வி

Published On 2020-01-12 09:12 GMT   |   Update On 2020-01-12 09:12 GMT
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனி நீண்ட நாள் ஓய்வில் இருப்பது ஏன்? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பைகளை வென்று பெருமை சேர்த்தவர் எம்எஸ் டோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும், 2011-ல் ஒரு நாள் போட்டி உலக கோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

3 வடிவிலான அணிக்கும் கேப்டனாக இருந்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், அந்த அணிகளில் மட்டும் இடம் பெற்றார்.

இங்கிலாந்தில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை நடந்த உலக கோப்பை போட்டியோடு டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட டோனி முடிவு செய்துள்ளார். அதோடு அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியின் ஆட்டத்தைப் பொறுத்துதான் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்பது தெரிய வரும்.

உலக கோப்பை போட் டிக்கு பிறகு டோனி இதுவரை எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. ஒரு நாள் போட்டியில் அவரது எதிர் காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் டோனி நீண்ட காலமாக விளையாடாதது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.ஷ

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை அணியில் டோனி இடம் பெறுவாரா? என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். இதற்கு உடல் தகுதி முக்கியம். கடந்த ஜூலை மாதத்துக்கு பிறகு டோனி இந்திய அணியில் இணைந்து ஆடவில்லை. இதுதான் முக்கியமான கேள்வி. யாராவது நீண்ட காலம் இந்திய அணிக்காக ஆடாமல் இருப்பார்களா?

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட ரஞ்சிப் போட்டியில் சம்பளம் குறைவாக கிடைக்கிறது. இந்த ஊதிய வேறுபாடு தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கவனம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News