செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித், லாபஸ்சாக்னே

சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 283/3

Published On 2020-01-03 07:45 GMT   |   Update On 2020-01-03 07:45 GMT
சிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் லாபஸ்சாக்னே சதமும், ஸ்மித் அரைசதமும் அடித்தனர்.
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் உடல் நலக் குறைவால் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக கிளைன் பிலிப்ஸ், ஆஸ்லே, சோமர்வில் ஆகியோர் இடம்பெற்றனர்.

காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் போல்டுக்கு பதிலாக மேட் ஹென்றி இடம் பெற்றார். கேப்டனாக டாம் லாதம் செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டேவிட் வார்னர் - லாபஸ்சாக்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

வார்னர் 45 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் ஸ்டீவ் ஸ்மித் களம் வந்தார். அவர் மிகவும் நிதானமாக விளையாடினார். 39 பந்தில்தான் தனது முதல் ரன்னை எடுத்தார். மறுமுனையில் லாபஸ்சாக்னே அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

லாபஸ்சாக்னேவைத் தொடர்ந்து ஸ்மித்திற்கும் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய லாபஸ்சாக்னே சதம் அடித்தார்.

இவரது சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் 283 ரன்கள் சேர்த்துள்ளது. லாபஸ்சாக்னே 130 ரன்னுடனும், மேத்யூ வடே 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News