செய்திகள்
விராட் கோலி, பொல்லார்டு

கடைசி டி20 போட்டி: தொடரை வெல்வது யார்?- இந்தியா வெஸ்ட் இண்டீஸ் நாளை பலப்பரீட்சை

Published On 2019-12-10 06:41 GMT   |   Update On 2019-12-10 06:41 GMT
கோப்பையை கைப்பற்றும் நோக்கில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று டி20 போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் நாளை (11-ந்தேதி) நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் தொடரை வெல்லப் போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தொடர்ச்சியாக 2 தொடரை (3-0, 3-0) கைப்பற்றி இருந்தது. தற்போது ‘ஹாட்ரிக்‘ தொடரை வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி எல்லா வகையிலும் கடும் சவாலாக இருக்கும்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையில் இருக்கும் இந்தியா பீல்டிங்கில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சரி செய்வது மிகவும் அவசியமானது.

அதிரடி வீரரான ரோகித் சர்மா கடந்த 2 ஆட்டத்திலும் சோபிக்க தவறிவிட்டார். ஒரு சிக்சர் கூட அவரால் அடிக்க முடியாமல் போனது பரிதாபமே. அவர் 23 ரன்களே எடுத்துள்ளார். சொந்த மண்ணில் நாளை விளையாடுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

புதுமுக வீரர் ஷிவம் டுபே கடந்த போட்டியில் 3-வது வீரராக களம் இறங்கி தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரி‌ஷப் பண்ட் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

திருவனந்தபுரம் போட்டியில் சொதப்பியதால் நாளைய ஆட்டத்துக்கான வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர் இடத்தில் மாற்றம் கொண்டு வரலாம். ஆடுகள தன்மையை பொறுத்து மாற்றம் முடிவு செய்யப்படும். வெஸ்ட் இண்டீசை வீழ்த்த இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும்.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தொடக்க வீரர்களான லென்டில் சிம்மன்ஸ், லிவிஸ் மற்றும் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் ஆவார்கள். அவர்கள் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.

பந்து வீச்சில் காட்ரெல், வில்லியம்ஸ், ஹைடன் வால்ஷ், ஹோல்டர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் டி20 போட்டியில்16 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 9-ல், வெஸ்ட் இண்டீஸ் 6-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.

நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்த ஆட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரி‌ஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, ஷிவம் டுபே, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் : பொல்லார்ட் (கேப்டன்), சிம்மன்ஸ், விவிஸ், ஹேட்மையர், நிக்கோலஸ் பூரன், பிரண்டன் கிங், ஹோல்டர், ஹைடன் வால்ஷ், வில்லியம்ஸ், பியர், காட்ரெல், ராம்தின், கீமோ பால், பேபியன் ஆலம்.
Tags:    

Similar News