செய்திகள்
வெற்றி பெறும் முனைப்பில் இந்திய வீரர்கள்

2வது டி20 போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்

Published On 2019-12-08 02:31 GMT   |   Update On 2019-12-08 02:31 GMT
டி 20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்றிரவு வெஸ்ட் இண்டீசுடன் 2-வது போட்டியில் மோதுகிறது.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்த போதிலும் அந்த இலக்கை இந்தியா 8 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து மிரட்டியது. இந்திய கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஆனால் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச்சுகளை தவறவிட்டனர். அதில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் இந்தியாவின் ரோகித் சர்மா (2,547 ரன்), விராட் கோலி (2,544 ரன்) உள்ளனர். ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பாரா அல்லது அவரை கோலி இந்த ஆட்டத்தில் முந்துவாரா? என்பதை பார்க்க சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.

உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 10 ஆட்டங்களில் 9-ல் தோல்வி அடைந்திருக்கிறது. ஐதராபாத் போட்டியில் ஹெட்மயர், பொல்லார்ட், இவின் லீவிஸ் அதிரடி காட்டி ரன்மழை பொழிந்தனர். ஆனால் மெகா ஸ்கோர் குவித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விதிக்கப்பட்டிருந்த 4 போட்டி தடை முடிந்துள்ளதால் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது.

திருவனந்தபுரம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர்.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், லென்டில் சிமோன்ஸ், பிரன்டன் கிங், ஹெட்மயர், பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், கேரி பியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஹேடன் வால்ஷ்.
Tags:    

Similar News