செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி

பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் - கங்குலி

Published On 2019-12-07 20:42 GMT   |   Update On 2019-12-07 20:42 GMT
அடுத்த 4 வருடங்களில் சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய 7 அணிகள் கொண்ட பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக பல நாட்டு வீராங்கனைகள் பங்கேற்ற 20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போட்டியை நடத்த நிறைய வீராங்கனைகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். அடுத்த 4 வருடங்களில் சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய 7 அணிகள் கொண்ட பெண்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம்.

முதலில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பலமான பெண்கள் அணியை உருவாக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நம்மிடம் 150 முதல் 160 வீராங்கனைகள் இருந்தால் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கலாம். தற்போது நம்மிடம் 50 முதல் 60 வீராங்கனைகள் தான் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கையால் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News