செய்திகள்
விளையாட்டு சூதாட்டங்கள்

விளையாட்டு சூதாட்டங்கள் சட்டப்பூர்வமாகிறது- எந்த நாட்டில் தெரியுமா?

Published On 2019-12-06 08:05 GMT   |   Update On 2019-12-06 08:05 GMT
கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் வரும் 2021ம் ஆண்டு முதல் விளையாட்டை மையமாகக் கொண்ட சூதாட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தாஷ்கண்ட்: 

சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பெருமையை எடுத்துச்சொல்ல விளையாட்டுத்துறையும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. அதன்  காரணமாகவே உலகின் அனைத்து நாடுகளும் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. எத்தனையோ விளையாட்டுகள்  இருந்தாலும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளுக்குதான் உலக அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர் எனலாம்.  

ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பிய நாடுகளே கால்பந்தாட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அதே நேரத்தில்  விளையாட்டை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டங்கள் நடப்பதையும் மறுப்பதற்கில்லை. அதிலும் கிரிக்கெட் சூதாட்டங்கள் பற்றி  சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலான நாடுகளில் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் விளையாட்டுச் சூதாட்டங்கள் வரும் 2021ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட  உள்ளது. 

இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயெவ் கையெழுத்திட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம்,  கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்கான பல குறிக்கோள்களை வகுப்பது, ரசிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பது,  குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளிகளைத் திறப்பது மற்றும் தேசிய லீக் விளையாட்டுகளில் வீடியோ உதவி நடுவரை  அறிமுகப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும். 

மேலும், 2030 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டு கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த ஆணை  வழிவகுக்கிறது. 

முன்னதாக, கால்பந்து விளையாட்டை அனைவரும் விரும்பும் வகையில் மாற்றுவதற்கும் அதை பிரபலப்படுத்த நிதி திரட்டுவதற்கும் விளையாட்டு சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்கலாம் என சில உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News