செய்திகள்
பிவி சிந்து

பிரீமியர் பேட்மிண்டன் தொடர்: இந்திய வீராங்கனை சிந்து ரூ.77 லட்சத்திற்கு ஏலம்

Published On 2019-11-27 05:01 GMT   |   Update On 2019-11-27 05:01 GMT
பிரீமியர் பேட்மிண்டன் தொடருக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ரூ.77 லட்சத்திற்கு ஏலம் போனார்.
புதுடெல்லி:

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான 5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 20-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை சென்னை, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ், அவாதே வாரியர்ஸ் (லக்னோ), ஐதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், புனே 7 ஏசஸ் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு மோதலும் இரண்டு ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என்று 5 ஆட்டங்கள் கொண்டது.

இந்த போட்டியையொட்டி வீரர், வீராங்கனைகளின் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் ரூ.2 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் ரூ.77 லட்சத்திற்கு மேல் யார் மீதும் முதலீடு செய்ய முடியாது. ஒவ்வொரு அணியிலும் 9 முதல் 11 பேர் வரை இடம் பெறலாம்.

154 பேர் இடம் பெற்ற ஏலப்பட்டியலில் இருந்து அதிகபட்சமாக உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து ரூ.77 லட்சத்திற்கு விலை போனார். அவரை ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங்கும் (சீனதைபே) இதே தொகைக்கு விலை போனார். அவரை நடப்பு சாம்பியன் பெங்களூரு ராப்டர்ஸ் அணி தட்டிச் சென்றது. உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத்தை ரூ.32 லட்சத்திற்கு பெங்களூரு அணி தக்க வைத்தது.

இதே போல் ஆண்கள் இரட்டையர் பிரிவு வீரர்கள் சுமீத் ரெட்டி (ரூ.11 லட்சம், சென்னை அணி), சிராக் ஷெட்டி (ரூ.15½ லட்சம், புனே அணி) முந்தைய சீசனில் விளையாடிய அணிகளில் தொடருகிறார்கள். இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இரட்டையர் பிரிவு வீரரான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டியின் அடிப்படை விலை ரூ.25 லட்சம் ஆகும். அவரை இழுக்க கடும் போட்டி நிலவிய நிலையில் ரூ.62 லட்சத்திற்கு சென்னை அணி சொந்தமாக்கியது. உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் பீவென் ஜாங், அவாதே வாரியர்ஸ் அணிக்கு ரூ.39 லட்சத்திற்கு ஒதுக்கப்பட்டார்.

காமன்வெல்த் விளையாட்டு முன்னாள் சாம்பியனான இந்தியாவின் காஷ்யப் ரூ.43 லட்சத்திற்கும் (மும்பை), இந்தியாவின் லக்‌ஷயா சென் ரூ.36 லட்சத்திற்கும் (சென்னை), இந்தோனேஷியாவின் டாமி சுகியர்டோ ரூ.41 லட்சத்திற்கும்(சென்னை அணி), ஹாங்காங்கின் லீ செக் யூ ரூ.50 லட்சத்திற்கும் (நார்த் ஈஸ்டர்ன்), கொரியாவின் கோ சங் ஹூன் ரூ.55 லட்சத்திற்கும் (அவாதே வாரியர்ஸ்), இந்தியாவின் சவுரப் வர்மா ரூ.41 லட்சத்திற்கும் (ஐதராபாத்) ஏலம் போனார்கள். இதே போல் தேசிய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் கோபிசந்தின் மகளான காயத்ரி ரூ.2 லட்சத்திற்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த சீசனில் பி.பி.எல். தொடரில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News