செய்திகள்
சஞ்சு சாம்சன், ஹர்பஜன் சிங்

தேர்வாளர்களை மாற்றுக... கங்குலிக்கு ஹர்பஜன் சிங் வலியுறுத்தல்

Published On 2019-11-26 13:56 GMT   |   Update On 2019-11-26 13:56 GMT
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதால், தேர்வாளர்களை மாற்றுக என கங்குலியிடம் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
வங்காளதேச அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால், அவர் மூன்று போட்டிகளிலும் களம் இறக்கப்படவில்லை. வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர்கள் மற்றும விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அவர் மூன்று போட்டிகளில் தண்ணீர் பாட்டில்தான் சுமந்து சென்றார்.

அதன்பின் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை சோதிக்கிறார்களா? அல்லது அவருடைய இதயத்தையா?’’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அவர்கள் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். தேர்வுக்குழு மாற்றப்பட்டு வலுவான நபர்கள் அங்கே இருக்க வேண்டும். கங்குலி தேவையானவைகளை செய்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.
Tags:    

Similar News