செய்திகள்
ரவி சாஸ்திரி, எம்எஸ் டோனி

எம்எஸ் டோனிக்கு இந்திய அணியில் இடம் உண்டா?- ரவி சாஸ்திரி பதில்

Published On 2019-11-26 13:25 GMT   |   Update On 2019-11-26 13:25 GMT
ஐபிஎல் 2020 சீசனில் எம்எஸ் டோனி எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப்பின், ராணுவத்தில் பணிபுரிய இருப்பதால் சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்தார். அவரது ஓய்வுக் காலம் முடிந்த பின்னரும் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்.

இதனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் அவர் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அணி நிர்வாகம் மற்றும் முக்கிய வீரர்களிடம் இதுகுறித்து கேட்டால், அது எம்எஸ் டோனியின் முடிவு. அவரது ஓய்வு முடிவை அவர்தான் எடுப்பார் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை சார்ந்துதான் அணிக்கு திரும்பும் முடிவு எடுக்கப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

எம்எஸ் டோனி குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் விளையாடும்போது, அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும். விக்கெட் கீப்பராக மற்ற வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள். டோனியின் ஃபார்முக்கு சவாலாக யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

ஐபிஎல் மிகப்பெரிய தொடர், ஏனென்றால் ஏறக்குறைய உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தபிறகு நடக்கும் கடைசி தொடராகும்’’ என்றார்.
Tags:    

Similar News