செய்திகள்
சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ் அதிரடி: கர்நாடகாவை வீழ்த்தியது மும்பை

Published On 2019-11-26 09:47 GMT   |   Update On 2019-11-26 09:47 GMT
சையத் முஷ்டாக் அலி டிராபியில் சூர்யகுமாரின் அதிரடியால் கர்நாடகாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை.
சையத் முஷ்டாக் அலி டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன்னேறிய 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

சூரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள கர்நாடகா - மும்பை அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கர்நாடகா அணியின் லோகேஷ் ராகுல், படிகல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ஆட்டத்தின் 2-வது பந்தில் டக்அவுட் ஆனார்.

படிகல் சிறப்பாக விளையாடி 34 பந்தில் நான்கு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசினார். மணிஷ் பாண்டே (4), கருண் நாயர் (8) சொற்ப ரன்களில் வெளியேற, அடுத்து வந்த ரோஷன் கடம் 47 பந்தில் 71 ரன்கள் அடிக்க, கர்நாடகா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, ஆதித்யா தாரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 30 ரன்களும், ஆதித்யா தாரே 12 ரன்களும் சேர்த்தனர்.

ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 53 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 94 ரன்கள் விளாச மும்பை 19 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் மும்பை 2 வெற்றிகள் மூலம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகா நான்கில் மூன்றில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News