செய்திகள்
கங்குலி

நியூசிலாந்துடன் பகல்-இரவு டெஸ்ட்? கங்குலி விளக்கம்

Published On 2019-11-26 07:17 GMT   |   Update On 2019-11-26 07:17 GMT
நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுமா? என்று கேள்விக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சொந்த மண்ணில் நடந்த முதல் பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.

பிங்க் நிற பந்து என்று அழைக்கப்படும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுவதற்கு சவுரவ் கங்குலி காரணமாக இருந்தார்.

முன்னாள் கேப்டனான அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பகல்-இரவு டெஸ்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து கண்டு களித்தனர். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.

சொந்த மண்ணில் பகல்- இரவு டெஸ்டில் இந்திய அணி வங்காளதேசத்தை 3 நாட்களில் எளிதில் வீழ்த்தியது. இதே போல வெளிநாட்டு பயணத்திலும் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி 24-ந் தேதி முதல் மார்ச் 4-ந் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் ஆட்டம், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுமா? என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இதுகுறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. நியூசிலாந்து தொடருக்கு இன்னும் கால அளவு இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்.

எதிர்காலத்தில் அதிக அளவு பகல்-இரவு டெஸ்டில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் அதிக அளவில் இந்த போட்டியை பார்ப்பார்கள்.

இவ்வாறு கங்குலி கூறினார்.
Tags:    

Similar News