செய்திகள்
பாராட்டு விழாவில் பிவி சிந்துவுக்கு பினராயி விஜயன் நினைவுப்பரிசு வழங்கிய காட்சி

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் - பி.வி.சிந்து

Published On 2019-10-10 06:48 GMT   |   Update On 2019-10-10 06:48 GMT
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என்றும் அந்த போட்டிக்காக தயாராகி வருவதாகவும் பி.வி.சிந்து கூறினார்.
திருவனந்தபுரம்:

உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதைத் தொடர்ந்து கேரள ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் பி.வி. சிந்துவுக்கு திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பி.வி.சிந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.



திருவனந்தபுரம் ஸ்டேடியம் அருகே சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு இருந்து பி.வி. சிந்துவை உற்சாகமாக வரவேற்றனர். அவரும் பொதுமக்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். மேலும் கேரள மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

கேரள அரசு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும், ஒலிம்பிக் அசோசியேசனின் பரிசு கோப்பையையும் பி.வி. சிந்துவுக்கு பினராயி விஜயன் வழங்கி பாராட்டினார்.

விழாவில் பி.வி.சிந்து பேசியதாவது:-

உங்களை போன்றவர்களின் ஊக்கம் மற்றும் ஆசீர்வாதத்தால் தான் உலக சாம்பியன் போட்டியில் என்னால் தங்க பதக்கம் வெல்ல முடிந்தது. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டிக்காக நான் தயாராகி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்களுக்கு பி.வி.சிந்து சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்குச் சென்றபோது கேரள பாரம்பரிய உடையை அணிந்தபடி பி.வி.சிந்து சென்றார்.

Tags:    

Similar News