செய்திகள்
விராட் கோலி

கேப்டனாக 50-வது டெஸ்ட்- டோனியின் சாதனை வரிசையில் இணைந்த கோலி

Published On 2019-10-10 05:19 GMT   |   Update On 2019-10-10 05:19 GMT
கேப்டனாக 50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இன்று களமிறங்கியதன் மூலம், முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையுடன் இணைந்துள்ளார்.
புனே:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

இப்போட்டி விராட் கோலி கேப்டனாக களமிறங்கும் 50வது டெஸ்ட் போட்டி ஆகும். இதன்மூலம், 50 டெஸ்ட் போட்டிகளை வழிநடத்திய இந்திய கேப்டன்கள் வரிசையில், இரண்டாவதாக இணைந்துள்ளார் கோலி. 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய டோனி முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற டோனியின் சாதனையை கோலி இந்த ஆண்டு துவக்கத்தில் முறியடித்தார். 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய டோனி, 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். விராட் கோலி மொத்தம் 49 போட்டிகளுக்கு தலைமை தாங்கி, அதில் 29 முறை வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் கேப்டன் கங்குலி 28 போட்டிகளுக்கு தலைமை தாங்கி, 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News