செய்திகள்
ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால்

சாதனையை வசமாக்கிய ரோஹித்-அகர்வால்: 300 ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய தொடக்க ஜோடி

Published On 2019-10-03 08:26 GMT   |   Update On 2019-10-03 08:26 GMT
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், 300 ரன்களுக்கு மேல் சேர்த்த 3-வது இந்திய தொடக்க ஜோடி என்ற சாதனையை ரோஹித்-அகர்வால் ஜோடி வசமாக்கியுள்ளது.
விசாகப்பட்டினம்:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக ஆடினார். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில், விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. 

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ரோகித் சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்து ஆடினார்கள். அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 204 பந்துகளை சந்தித்து 100 ரன்னை தொட்டார். அணியின் ஸ்கோர் 317 ஆக இருக்கும் போது, ரோகித் சர்மா 176 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தொடக்க ஜோடி 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இது மூன்றாவது முறையாகும். 1956 ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வினோ மன்கட் மற்றும் பன்கஜ் ராய் தொடக்க ஜோடி 413 ரன்கள் குவித்தது. அதன் பின்பு, 50 வருடங்கள் கழித்து  2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் தொடக்க ஜோடி 410 ரன்கள் எடுத்தது. 

13 ஆண்டுகள் கழித்து தற்போது ரோகித் - அகர்வால் தொடக்க ஜோடி 300 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. மயங்க் அகர்வால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக சதமடித்த 86-வது வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News