செய்திகள்
கிராண்ட் ஹோலோவே

உலக தடகள போட்டி - 110 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்க வீரருக்கு தங்கம்

Published On 2019-10-03 06:57 GMT   |   Update On 2019-10-03 06:57 GMT
உலக தடகள போட்டியின் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேலோவே முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
தோகா:

17-வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது.

இதில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹோலோவே முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். 22 வயதான அவர் பந்தய தூரத்தை 13.10 வினாடியில் கடந்தார். ஏற்கனவே 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தனர்.

செர்ஜி கபேன்கோவ் 13.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மார்ட்டினாட் 13.18 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பாவல் தங்கம் வென்றார். அவர் 80.50 மீட்டர் தூரம் எறிந்தார். குயின்டன் பிகாட் (பிரான்ஸ்) 78.19 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், பென்ஸ் (அங்கேரி) 78.18 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் பெற்றனர்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை டினா ஆசர்- சுமித் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 21.88 வினாடியில் கடந்தார். அவர் ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரிட்டேனி பிரவுன் 22.22 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், முஜின்கா (சுவிட்சர்லாந்து) 22.51 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர். 6-வது நாள் போட்டி முடிவில் 8 தங்கம், 8 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 18 பதக்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தை இருக்கிறது.

Tags:    

Similar News