செய்திகள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சாதனை- கலப்பு அணி பிரிவில் அடுத்தடுத்து தங்கம்

Published On 2019-05-30 16:36 GMT   |   Update On 2019-05-30 16:36 GMT
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியா இதுவரை இல்லாத அளவில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லி:

ஜெர்மனியின் முனிச் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தி அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபூர்வி சண்டேலா, பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ராகி சர்னோபத், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரி ஆகியோர் தங்கம் வென்றனர்.

இந்நிலையில், கடைசி நாளான இன்று கலப்பு அணிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மோத்கில், திவ்யன்ஷ் சிங் பன்வார் ஆகியோர் தங்கம் வென்றனர். மற்றொரு இந்திய ஜோடி அபூர்வி சண்டேலா-தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாக்கர், சவுரப் சவுத்ரி இணைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

இதன்மூலம் இந்திய அணி உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்துடன், பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்துடன் ரஷியா மூன்றாம் இடத்தைப் பிடித்தது. 
Tags:    

Similar News