செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2019-04-14 14:29 GMT   |   Update On 2019-04-14 23:25 GMT
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது . #IPL2019 #SRHvDC
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ரன்னிலும், பிரித்வி ஷா 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார்.  அவர் 45 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ரன்னில் அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.




ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 9.5 ஓவர்களில் 72 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கண்ட நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ (41 ரன்) கீமோ பால் பந்து வீச்சில் ரபடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை (51 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.


18.5 ஓவர்களில் ஐதராபாத் அணி 116 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 15 ரன்களுக்குள் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் ஆட்டநாயகன் விருது பெற்றார். 8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சுவைத்த 5-வது வெற்றி இதுவாகும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்திடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

#IPL2019 #SRHvDC
Tags:    

Similar News