செய்திகள்

அஸ்வின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல், 17 பந்தில் 48 ரன்கள் குவித்தார்

Published On 2019-03-28 12:07 GMT   |   Update On 2019-03-28 12:07 GMT
பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல் 17 பந்தில் 48 ரன்கள் குவித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். #Ashwin #KKR
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி நேற்றிரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிதிஷ் ராணா 34 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். அப்போது கொல்கத்தா 14.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. ராணா ஆட்டமிழந்ததும் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 17-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை அபாயகரமான வகையில் சூப்பர் யார்க்கராக வீசினார். இதில் ரஸல் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இதனால் ஐந்து பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ரஸில் வெளியேற முயன்றார். அப்போது கொல்கத்தா வீரர்கள் 30 யார்டு வட்டம் என அழைக்கப்படும் உள்வட்டத்திற்குள் மூன்று வீரர்கள் மட்டுமே நின்றிருந்ததை கவனித்தனர். இதுகுறித்து நடுவரிடம் கூற, அவர் ‘நோ-பால்’ என அறிவித்தார். இதனால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பினார். உள்வட்டத்திற்குள் கட்டாயமாக நான்கு பீல்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பேர் மட்டுமே நின்றிருந்ததை அஸ்வின் கவனிக்கவில்லை.

அதன்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு துவம்சம் செய்தார். 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். ஷமியின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களுடன் 22 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் கொல்கத்தா 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து விட்டது.



அஸ்வின் தனது கேப்டன் பொறுப்பில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த சம்பவம் குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த சின்ன விஷயத்தில் உண்மையிலேயே கவனம் செலுத்தவில்லை. சின்ன விஷயம் டி20 கிரிக்கெட்டில் பெரிய பாதிப்பை கொடுத்துள்ளது. அடுத்த போட்டியில் இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நோ-பால் சம்பவத்திற்கான விமர்சனங்களை எனக்குள்ளதாக எடுத்துக் கொள்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News