செய்திகள்
ஹேண்ட்ஸ்காம்ப்

கவாஜா சதம், ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம்: இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2019-03-13 07:43 GMT   |   Update On 2019-03-13 12:07 GMT
ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கவாஜா சதம், ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதத்தால் இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெரேன்டர்ப் ஆகியோர் நீக்கப்பட்டு மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் லயன் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் கேஎல் ராகுல், சாஹல் நீக்கப்பட்டு ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதே நேரம் அடிக்கக்கூடிய பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினர். அதனால் ஆஸ்திரேலியா 9.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார்.

அடுத்து கவாஜா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. கவாஜா 48 பந்தில் அரைசதம் அடித்தார். 19.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட ஆஸ்திரேலியா 26.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. இருவரும் நிலைத்து நின்று விளையாடியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் எளிதாக 300 ரன்னைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். சதம் அடித்த அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 1 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.



நம்பிக்கையுடன் விளையாடிய ஹேணஸ்ட்காம்ப் 50 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர்  52 ரன்னில் முகமது ஷமி பந்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 36.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்தில் மந்த நிலை ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா 39.2 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. கடந்த போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்த ஆஷ்டோன் டர்னர் 20 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 3 ரன்களில் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

48-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா நான்கு பவுண்டரிகள் அடித்தது. இதனால் ஆஸ்திரேலியா 250 ரன்னைத் தாண்டியது.



கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்ற ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
Tags:    

Similar News