செய்திகள்

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: தொடரை 4-1 எனக் கைப்பற்றியது

Published On 2019-02-03 16:01 IST   |   Update On 2019-02-03 19:01:00 IST
வெலிங்டன் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 35 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 4-1 எனக்கைப்பற்றியது இந்தியா. #NZvIND
வெலிங்டன்:

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் டோனி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் முகமது ‌ஷமி, விஜய் சங்கர் ஆகியோரும் இடம் பெற்றனர். தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், கலீல் அகமது ஆகியோர் நீக்கப்பட்டனர்.

நியூசிலாந்து அணியில் கப்திலுக்குப் பதில் முன்ரோ இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. 18 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷுப்மன் கில் 7 ரன்னிலும் ஹென்ரி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் போல்ட் பந்தில் ‘அவுட்’ ஆனார்கள்.

5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 29-வது ஓவரில் இந்தியா 100 ரன்னைத் தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தனது அறிமுக அரைசதத்தை எடுப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 64 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்த அவர் துரதிருஷ்டவசமாக ‘ரன்அவுட்’ ஆனார்.

அம்பதி ராயுடு 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேதர் ஜாதவ் 45 பந்தில் 34 ரன்களும், ஹர்திக் பாண்டியா 22 பந்தில் 45 ரன்களும் அடிக்க இந்தியா 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரி 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கொலின் முன்ரோ (24), நிக்கோல்ஸ் (8) ஆகியோரை முகமது ஷமி வெளியேற்றி நியூசிலாந்து அணிக்கு தொடத்திலேயே தடையை ஏற்படுத்தினார். ராஸ் டெய்லர் 1 ரன் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இதனால் இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது.



அணியின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருவரும் ஆட்டமிழந்த பிறகு போட்டி முழுவதுமாக இந்தியாவின் கைக்குள் வந்தது.

நீஷம் அதிரடியாக விளையாடி இந்தியாவை சற்று அச்சுறுத்தினார். 32 பந்தில் 44 ரன்கள் எடுத்திருந்த அவரை, டோனி அற்புதமான வகையில் ரன்அவுட் ஆக்கினார். அத்துடன் நியூசிலாந்தின் தோல்வி உறுதியானது.



கிராண்ட்ஹோம் 11 ரன்னும், சான்ட்னெர் 22 ரன்னும், ஆஸ்ட்லே 10 ரன்னும் அடிக்க நியூசிலாந்து 44.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக்கைப்பற்றியது. சாஹல் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

90 ரன்கள் குவித்த அம்பதி ராயுடு ஆட்ட நாயகன் விருது பெற்றார். நான்கு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 6-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

Similar News