செய்திகள்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்னில் வெற்றி: பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது

Published On 2019-01-14 10:27 GMT   |   Update On 2019-01-14 10:27 GMT
ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. #SAvPAK
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது.

இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் ஆசம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஆசாத் ஷபிக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பாபர் ஆசம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சர்பிராஸ் அகமது ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஆசாத் ஷபிக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.



ஷபிக் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது. பஹீம் அஷ்ரப் 15 ரன்னிலும், முகமது அமிர் 4 ரன்னிலும், ஹசன் அலி 22 ரன்னிலும், முகமது அப்பாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 273 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர், ரபாடா தலா 3 விக்கெட்டுக்களும், ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
Tags:    

Similar News