செய்திகள்
இந்திய கேப்டன் சுனில் சேத்ரி

இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

Published On 2019-01-05 05:02 GMT   |   Update On 2019-01-05 05:02 GMT
இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. #AFCAsianCup
அபுதாபி:

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 4 முறை சாம்பியனான ஜப்பான் உள்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த முறை 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளின் எண்ணிக்கை முதல்முறையாக 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பக்ரைன், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா பாலஸ்தீனம், ஜோர்டான், ‘சி’ பிரிவில் தென்கொரியா, சீனா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், ‘டி’ பிரிவில் ஈரான், ஈராக், வியட்நாம், ஏமன், ‘இ’ பிரிவில் சவூதி அரேபியா, கத்தார், லெபனான், வடகொரியா, ‘எப்’ பிரிவில் ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஓமன், துர்க்மெனிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பெறும் அணிகளில் 4 சிறந்த அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

அபுதாபியில் இன்று இரவு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைனை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தியாவின் ஆட்டம் மற்றும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

1956-ம் ஆண்டு முதல் நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று இருப்பது இது 4-வது முறையாகும். 1964-ம் ஆண்டு போட்டியில் 2-வது இடம் பெற்ற இந்திய அணி அதன் பிறகு குறிப்பிடத்தக்க வகையில் சோபிக்கவில்லை. இந்த ஆசிய கோப்பை போட்டியில் சுனில் சேத்ரி தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. சமீப காலங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த தொடரில் ஜொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AFCAsianCup
Tags:    

Similar News