செய்திகள்

‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்துவேன்’ - யுவராஜ்

Published On 2018-12-21 05:16 GMT   |   Update On 2018-12-21 05:16 GMT
மும்பை அணியில் தனக்கு உகந்த சூழல் இருப்பதாகவும், வரும் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். #YuvrajSingh #IPLCricket
மும்பை:

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் 37 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கிரிக்கெட் மீதான எனது வேட்கை இன்னும் குறையவில்லை. அதனால் தான் விளையாடிக்கொண்டு இருக்கிறேன். இந்த சீசனில் நிச்சயம் அசத்துவேன் என்று நம்புகிறேன். ஐ.பி.எல். ஏலத்தில் முதல் ரவுண்டிலேயே என்னை எந்த அணியாவது தேர்வு செய்யும் என்று நினைக்கவில்லை. அதனால் இதில் எனக்கு ஏமாற்றம் ஏதும் இல்லை. ஒரு ஐ.பி.எல். அணியாக, இளம் வீரர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நானோ கிட்டத்தட்ட எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கிறேன். ஆனால் அடுத்த ரவுண்டில் என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே நடந்தது.

மும்பை அணியில் எனக்கு உகந்த சூழல் இருக்கும். அந்த அணியில் ஜாகீர்கான் (கிரிக்கெட் இயக்குனர்), சச்சின் டெண்டுல்கர் (ஆலோசகர்), ரோகித் சர்மா (கேப்டன்) ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவர்களுடன் மறுபடியும் கைகோர்த்து விளையாட ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அணியில் உங்களுக்கு ஆதரவு இருக்கும் போது, அது நன்றாக ஆடுவதற்கு ஊக்கமாக அமையும். இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக (6 இன்னிங்சில் 65 ரன்) நான் சரியாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 4-5 ஆட்டங்களில் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் இறக்கப்பட்டேன். குறிப்பிட்ட ஒரே வரிசையில் தொடர்ந்து ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.  #YuvrajSingh #IPLCricket

Tags:    

Similar News