செய்திகள்

டெஸ்ட் தொடர்: 49 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து சாதனை

Published On 2018-12-07 12:22 GMT   |   Update On 2018-12-07 12:22 GMT
டெஸ்ட் தொடரில் வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானை 49 வருடத்திற்குப் பிறகு வீழ்த்தி நியூசிலாந்து சாதனைப் படைத்துள்ளது. #PAKvNZ
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன் (139), நிக்கோல்ஸ் (126 அவுட் இல்லை) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இன்றைய கடைசி நாளில் 81 ஓவர்கள் மீதம் இருந்தது.

இமாம்-உல்-ஹக், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹபீஸ் 8 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அசார் அலி (5), ஹரிஸ் சோகைல் (9), ஆசாத் ஷபிக் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இதனால் பாகிஸ்தான் 55 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அடுத்து வந்த பாபர் ஆசம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். மற்ற வீரர்களான சர்பிராஸ் அகமது (28), பிலால் ஆசிப் (12), யாசிர் ஷா (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


ஹபீஸ் க்ளீன் போல்டாகிய காட்சி

அரைசதம் அடித்த பாபர் ஆசம் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 56.1 ஓவரில் 156 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

நியூசிலாந்து கடந்த 1969-ம் ஆண்டு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன்பின் தற்போது 49 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.
Tags:    

Similar News