செய்திகள்

அம்பதிராயுடு புத்திசாலி - விராட் கோலி பாராட்டு

Published On 2018-10-30 06:58 GMT   |   Update On 2018-10-30 07:09 GMT
அம்பதிராயுடு புத்திசாலி என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். #viratkohli #INDvWI

மும்பை:

4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

மும்பையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்தது. ரோகித்சர்மா 137 பந்தில் 162 ரன்னும் (20 பவுண்டரி, 4 சிக்சர்), அம்பதிராயுடு 81 பந்தில் 100 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 36.2 ஓவரில் 152 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 224 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 50 ரன் எடுத்தார். கலீல் அகமது, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

 


இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-

3-வது போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களுக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டது. அதில் இருந்து நாங்கள் தற்போது மீண்டு வந்துள்ளோம். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய துறைகளிலும் எங்களது செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது.

அம்பதிராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு 2019 உலக கோப்பை வரை அணி துணை நிற்கும். அவரது விளையாட்டு நன்றாக இருக்கிறது.

ஒரு நாள் போட்டி அணிக்கு 4-வது வீரர் வரிசை சரியாக அமையவில்லை. தற்போது ஒரு புத்திசாலி அந்த இடத்தை நிரப்பி இருப்பது மகிழ்ச்சி.

இதே போல் பந்து வீச்சிலும் நாங்கள் பல்வேறு சோதனைகளை மேற் கொண்டு வருகிறோம். அதனால்தான் கலீல் அகமதுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

2015-ல் உலக கோப்பைக்கு பிறகு 4-வது வீரர் வரிசை இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறது. 4-வது வரிசையில் களம் இறங்கி கடந்த சில தினங்களில் சதம் அடித்த 3-வது இந்திய வீரர் அம்பதிராயுடு ஆவார். மனிஷ்பாண்டே, யுவராஜ் ஆகியோர் மட்டுமே இந்த வரிசையில் சதம் அடித்து இருந்தனர்.

அம்பதிராயுடு குறித்து ரோகித் சர்மா கூறும்போது, “4-வது வீரர் வரிசைக்கு அம்பதிராயுடுவே பொருத்தமானவர். உலக கோப்பை வரை அவர் அந்த வரிசையில் ஆடுவார். யாரும் அதுபற்றி இனி கேள்வி எழுப்ப இயலாது. நெருக்கடியான நிலையில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.

தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறும்போது, “எங்கள் அணி வீரர்கள் முழு பலத்துடன் ஆடவில்லை. இதுதான் எங்களின் மோசமான தோல்விக்கு காரணம். தேவையில்லாத ரன் அவுட்டுகளும் எங்களது பேட்டிங்கை சீர் குலைத்து விட்டது. அடுத்த போட்டிகளில் இது தவிர்க்கப்படும். இதே போல வீரர்கள் தேர்விலும் மாற்றம் செய்யப்படும்” என்றார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 5-வது மற்றும் கடைசி ஆட்டம் வருகிற 1-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. #viratkohli #INDvWI

Tags:    

Similar News