செய்திகள்

தியோதர் டிராபி- இளம் வீரர் ஷுப்மான் கில் அசத்தல் சதத்தால் இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’

Published On 2018-10-25 13:32 GMT   |   Update On 2018-10-25 13:32 GMT
இளையோர் உலகக்கோப்பையில் அசத்திய ஷுப்மான் கில் சதம் அடிக்க இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா ‘சி’.
தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஈஸ்வரன், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஈஸ்வர்ன் 69 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 59 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த நிதிஷ் ராணா 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும், கேதர் ஜாதவ் 41 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது.

பின்னர் 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் ரகானே, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 14 ரன்னிலும், முகுந்த் 37 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.

இதனால் இந்தியா ‘சி’ அணி 85 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இஷான் கிஷான் 60 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்தார்.


இஷான் கிஷான்

ஷுப்மான் கில் சதத்தாலும், சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தாலும் இந்தியா ‘பி’ 47 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷுப்மான் கில் 111 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 106 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ‘சி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 27-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ பலப்பரீட்சை நடத்துகின்றன.
Tags:    

Similar News