செய்திகள்

அபு தாபி டெஸ்ட்- ஆறு பந்தில் நான்கு விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்- மதிய உணவு இடைவேளை வரை 77/5

Published On 2018-10-16 08:54 GMT   |   Update On 2018-10-16 08:54 GMT
அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தார். #PAKvAUS
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் பகர் சமான், மிர் ஹம்சா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

பகர் சமான், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் ஹபீஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பகர் சமான் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் மந்த நிலையில் உயர்ந்தது. 18.2 ஓவரில் பாகிஸ்தான் 50 ரன்னைத் தொட்டது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசினார். இந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஓவரின் ஐந்தாவது பந்தில் அசார் அலி 15 ரன்கள் எடுத்த நிலையில் லயனிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஹரிஸ் சோஹைல் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார்.

அதோடு மட்டுமல்லாமல் 22-வது ஓவரின் 2-வது பந்தில் ஆசாத் ஷபிக் ரன்ஏதும் எடுக்காமலும், 4-வது பந்தில் பாபர் ஆசம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 57 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பகர் சமான் அதன்பின் மூன்று பவுண்டரிகள் விளாசினார். இருவரும் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. பகர் சமான் 49 ரன்களுடனும், சர்பிராஸ் அஹமது 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News