செய்திகள்

இங்கிலாந்து, இந்தியா இரண்டு ஸ்பின்னர்களுடன் களம் இறங்க வாய்ப்பு- மோர்கன்

Published On 2018-08-07 10:29 GMT   |   Update On 2018-08-07 10:29 GMT
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

2-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை). 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்தில் விளையாடும்போது லார்ட்ஸ் மைதானத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால் லார்ட்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தற்போது இங்கிலாந்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் குறைந்து காணப்படும். அத்துடன் லார்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இரண்டு அணிகளும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடும் என்று இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து இயன் மோர்கன் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் மைதானம் மிகவும் அற்புதமானது. ஈரப்பதம் மட்டுமல்ல, ஆடுகளம் சதுர வடிவில் இருக்கும். இது எப்போதுமே கடினமான விஷயம். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் போன்றுதான் லார்ட்ஸ் செயலாற்றும் என நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் மிகப்பெரிய பங்காற்றும்.

இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க ஆலோசனைகள் செய்யும். இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்காவிடில், அது அனைவருக்குமே ஆச்சர்யமாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News