செய்திகள்

ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை வெற்றிக்கு பிறகு தீபா கர்மாகருக்கு காத்திருக்கும் சவால்கள்

Published On 2018-07-09 06:33 GMT   |   Update On 2018-07-09 06:33 GMT
காயத்திலிருந்து மீண்டு உலகக்கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், அடுத்து களமிறங்க உள்ள ஆசிய போட்டியில் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. #DipaKarmakar
இஸ்தான்புல்:

துருக்கியின் மெர்சின் நகரில் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்று சிறப்பாக  செயல்பட்ட இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், வால்ட்  பிரிவில் 14.150 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை போட்டியில் தீபா கர்மாகர் பெறும் முதல் தங்கம் இதுவாகும்.

இதேபோல் பேலன்ஸ் பீம் பிரிவில் தீபா கர்மாகர்,12.1 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்தார். 11 85 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தார். இந்த பிரிவில் துருக்கி வீராங்கனை கோக்சு சான்லி 12.55 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர் (24), கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இதில் தீபா 4-வது இடத்தைப் பிடித்தார். அதன்பின்னர், முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து, 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்தார். காயத்திலிருந்து மீண்ட அவர், முதல் முறையாக சர்வதேச அரங்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த வரலாற்று வெற்றி தந்த உற்சாகத்துடன் ஆசிய போட்டியில், தீபா கர்மாகர் களமிறங்குகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் தீபா கர்மாகருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.



கடந்த அணடு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லியு ஜின்ரு 14.400 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மேலும், கடந்த மே மாதம் சீன சாம்பியன்ஷிப் போட்டியில் 14.485 புள்ளிகள் பெற்று அசத்தினார். இதேபோல் கடந்த ஆசிய போட்டியில் 14.200-க்கும் மேற்பட்ட புள்ளிகள் பெற்ற தென்கொரிய வீராங்கனைகள் இரண்டு பேர் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
 
சீனாவின் வாங் யாங்- மாவோ இணையும் தங்கள் பிரிவு போட்டிகளில் 14.300 புள்ளிகளுக்கும் அதிகமாக பெற்று எதிராளிகளை கதிகலங்க செய்தவர்கள். லியு ஜின்ரு கடந்த உலகக் கோப்பையில் 14.625 புள்ளிகள் பெற்று அனைவருக்கும் செக் வைத்துள்ளார். மேலும் சில முன்னணி வீராங்கனைகளும் களத்தில் உள்ளனர்.

இத்தனை போட்டியாளர்களின் சவால்களையும் கடந்து தீபா கர்மாகர் பதக்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.  #DipaKarmakar
Tags:    

Similar News