செய்திகள்

உலகக் கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது- தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்

Published On 2018-05-28 20:26 IST   |   Update On 2018-05-28 20:26:00 IST
ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வால் உலகக் கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன தென்ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஏபி டி வில்லியர்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தென்ஆப்பிரிக்கா நினைத்தது. இந்நிலையில் அவரது முடிவு அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளரான ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பு ஏபி டி வில்லியர்ஸ் என்னிடம் பேசினார். அவரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவருடன் நெருங்கிய நபருடன் மட்டுமே முடிவு குறித்து பேசியுள்ளார்.



அவர் உலகின் தலைசிறந்த வீரர். உலகக் கோப்பையில் அவரால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். இது அவருக்குத் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அவர் விளையாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் நாங்கள் உலகக்கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இதற்கான காலஅவகாசம் எங்களுக்கு உள்ளது. ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு நாட்டிற்கும், உலக கிரிக்கெட்டிற்கும் பெரிய ஏமாற்றம்’’ என்றார்.
Tags:    

Similar News