செய்திகள்

குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறுவது எப்படி?

Published On 2018-05-08 04:03 GMT   |   Update On 2018-05-08 04:03 GMT
நடப்பு ஐபிஎல் தொடரில் சராசரி ரன்கள் மட்டுமே அடித்து எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி வெற்றி வாகைசூடுவது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. #IPL2018 #SRH #SunRisersHyderabad

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. முன்னணி வீரர்கள் என அனியில் பெரிதாக யாரும் இல்லை. தடை காரணமாக வார்னர் விளையாட முடியாத சூழல். நட்சத்திர வீரராக உள்ள தவான், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மணிஷ் பாண்டே ஆகியோரும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

மொத்தத்தில் அணியின் பேட்ஸ்மேன்கள் இதுவரை தங்களது திறமையை வெளிக்காட்டாமலேயே உள்ளனர். இதனால், அந்த அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் சராசரி ரன்களையே எடுத்து வருகிறது. ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் 130 முதல் 150 ரன்கள் வரை மட்டுமே எடுத்துள்ளது.

பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான இரு சேசிங் ஆட்டங்களிலும் மட்டுமே அந்த அணி 170 ரன்களை தாண்டியுள்ளது. ஆனால், அந்த இரு போட்டிகளிலுமே ஐதராபாத் தோல்வியடைந்தது. மற்ற சேசிங் போட்டிகளிலும் எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டிவிடுவதால் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அழுத்தம் இல்லை. இதனால், மிக எளிதாகவே பல ஆட்டங்களை அந்த அணி வென்றுள்ளது.



பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை பொறுத்த வரை மிகவும் வலுவாக அந்த அணி இருப்பதனாலே பிளே-ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. எதிரணியில் உள்ள முக்கிய வீரர்களின் விக்கெட்டை விரைவில் காலி செய்வதினால், அந்த அணியை குறைந்த ரன்களில் சுருட்ட முடிகிறது. திட்டமிடப்பட்ட நேர்த்தியான பந்துவீச்சு மட்டுமே இதற்கு காரணம்.

15 ஓவர்களுக்கு பிறகு எந்த அணியும் அதிரடியாக விளையாட தொடங்கிவிடும். எனவே, கடைசி 5 ஓவர்களில் பந்துவீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். ஆனால், ஐதராபாத் அணி பவுலர்கள் இந்த கடைசி கட்ட ஓவர்களில் தான் மிகச்சிறப்பாக பந்து வீசுகின்றனர்.

புவனேஷ்வர் குமார், ரஷித் கான், சித்தார்த் கவுல், யூசுப் பதான் ஆகியோர் ஒவ்வொரு ஆட்டத்திலும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். “ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவது சிறப்பான ஒன்றாக உள்ளது. ஆனாலும் பலமுறை கடின முயற்சிகளுக்கு பின்னரே அது கிடைத்துள்ளது. எங்களது பந்துவீச்சு அபாரமான ஒன்றாக உள்ளது, பீல்டிங்கும் கூட” என ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.



2016-ம் ஆண்டு ஐதராபாத் அணி சாம்பியன் அணியான ஐதராபாத், இதேபோல, சிறப்பான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக இம்முறை சாம்பியன் கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர். #IPL2018 #SRH #SunRisersHyderabad
Tags:    

Similar News