ஐ.பி.எல்.(IPL)

முக்கியமான கட்டத்தில் லுங்கி நிகிடி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்

Published On 2018-05-03 16:15 IST   |   Update On 2018-05-03 16:15:00 IST
ஐபிஎல் தொடரில் பாதி ஆட்டங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் லுங்கி நிகிடி என்ற வேகப்பந்து வீச்சு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. #IPL2018 #CSK
ஐபில் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் பாதி தூரத்தை கடந்து விட்டது. இரண்டு வருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை பார்த்துதான் ஏலம் எடுத்தது. வயதான வீரர்களை கொண்டு சென்னை அணி எப்படி விளையாடப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் வயது ஒரு பிரச்சினை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அம்பதி ராயுடு, வாட்சன், பிராவோ ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் டோனி அதிரடி ஆட்டதை வெளிப்படுத்தி வருகிறார்.

வேகப்பந்து வீச்சல் தீபக் சாஹர், வாட்சன், பிராவோ, சர்துல் தாகூர். இதில் தீபக் சாஹர் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசினார். தற்போது காயத்தால் அவர் அணியில் இருந்து இரண்டு வாரங்கள் விலகியுள்ளார். வாட்சன், பிராவோ பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. இதை வெளிப்படையாக டோனியே தெரிவித்துள்ளார். பிளேஆஃப் சுற்றுகளின்போது வேகப்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தால் வெற்றி பெறுவது கடினம் என்றார்.

இதற்கிடையில் கேதர் ஜாதவ் காயம் காரணமாக வெளியேறிதால், லுங்கி நிகிடியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேர்த்துக் கொண்டது. சுமார் 6 அடி உயரம், கம்பீரமான தோற்றமுடைய நிகிடி அணிக்கு தயாரான நிலையில், அவரது தந்தை காலமானதால் தென்ஆப்பிரிக்கா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.



பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். கடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். ஷார்ட் மற்றும் பவுன்சர் பந்தால் எதிரணியை மிரட்டினார். முதல் இரண்டு ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் நிகிடி பந்து வீசினார். அருமையான யார்க்கர் பந்தால் முதல் மூன்று பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

பந்து வீச்சு சரியில்லை என்று கூறிவந்த நிலையில், தற்போது நிகிடியை ஆயுதமாக பயன்படுத்த இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் உள்ள 6 போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் சுற்று உறுதியாகிவிடும்.

லுங்கி நிகிடி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய விக்கெட்டுக்களை சாய்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News